Friday, 26 January 2024

திருக்குறள் கதைகள் - 608 ஏன் இந்த நிலை?

 திருக்குறள் கதைகள் - 608



608. ஏன் இந்த நிலை?


"ஏண்டா, செல்வம் என்டர்பிரைசஸ் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் பண்ணச் சொன்னேனே,வசூல் பண்ணினியா இல்லையா?" என்றான் கோபாலசாமி.


"இல்லீங்க! தினம் போய் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு நாளைக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருக்காரு!" என்றான் வேல்முருகன்.


"நீ ஒரு சோம்பேறியாச்சே! அவங்க சொன்ன நேரத்துக்குப் போயிருக்க மாட்டே! சம்பளம் கொடுக்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நீ அந்தப் பணத்தை வசூலிக்கலேன்னா உனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாது!"


முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு முதலாளியின் அறையிலிருந்து வெளியே வந்த வேல்முருகனைப் பச்சாதாபத்துடன் பார்த்தார் அக்கவுன்டன்ட் குணசீலன்.


சற்று நேரத்தில் வேல்முருகன் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க வெளியே கிளம்பி விட்டான்.


வேல்முருகன் வெளியே சென்றதும், "பாவம்! பெரிய இடத்துப் பிள்ளை! இவன்கிட்ட அடிமைப் பொழைப்பு பொழைக்கணும்னு அவனுக்குத் தலையெழுத்து!" என்றார் குணசீலன் தன் அருகிலிருந்த ஊழியன் சபாபதியிடம்.


"பெரிய இடத்துப் பிள்ளையா?" என்றான் சபாபதி வியப்புடன்.


"ஆமாம். வேல்முருகனோட அப்பா அவங்க ஊர்ல ஒரு பெரிய மனுஷர். ஊர்ல அவருக்கு ரொம்ப மரியாதை உண்டு. வேல்முருகன் அவருக்கு ஒரே பையன். அவர் போனப்பறம் வேல்முருகன் வேலைக்குப் போகாம வெட்டியா வீட்டில உக்காந்து பொழுதைக் கழிச்சுக்கிட்டிருந்தான். அவன் அம்மாவும் இறந்தப்பறம் அவனுக்கு புத்தி சொல்ல யாரும் இல்ல. அப்பா விட்டுட்டுப் போன சொத்து கரைஞ்சுக்கிட்டே இருந்தது அவனுக்குத் தெரியல. "கல்யாணம் ஆகிக் குடும்பமும் ஏற்பட்டப்பறம்தான் குடும்பம் நடத்தவே பணம் இல்லேங்கற நிலைமை வந்தது அவனுக்குப் புரிஞ்சுது"


"நிறைய சொத்து இருந்த்துன்னு சொன்னீங்களே!"


"எவ்வளவு சொத்து இருந்தா என்ன? சம்பாதிக்காம சொத்தை வித்துத் தின்னுக்கிட்டிருந்தா  சொத்து எவ்வளவு வேகமாக் கரையுங்கறது அந்த நிலைமையை அனுபவிச்சங்களுக்குத்தான் தெரியும். நீங்க அனுபவிச்சிருக்கீங்களான்னு கேக்காதே! இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்பட்டதை நான் பாத்திருக்கேன்!" என்றார் குணசீலன்.


"அப்புறம்?" என்றான் சபாபதி கதை கேட்கும் ஆர்வத்துடன்.


"அப்புறம் என்ன? வேல்முருகன் வேலை தேட ஆரம்பிச்சான். எதுவும் கிடைக்கல. கடைசியில நம்ம ஆள்கிட்ட வந்து மாட்டினான். இதில சோகம் என்னன்னா நம் முதலாளியோட அப்பாவுக்கும் வேல்முருகனோட அப்பாவுக்கும் ஆகாது. இப்ப அவர் பையன் வேல்முருகன் மேல இரக்கப்பட்டு அவனுக்கு வேலை கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு அவனை ஒரு அடிமை மாதிரி. நடத்தறான். தன்னை விட வயசில பெரியவன்னு கூட பாக்காம வேல்முருகனை வாடா போடான்னு பேசறதும், விரட்டறதும், கடுமையாப் பேசறதும், எனக்கு பாக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றார் குணசீலன்.


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 61

மடியின்மை (சோம்பலின்மை)


குறள் 608:

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.


பொருள்:

நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் வந்து பொருந்தினால், அது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.


Wednesday, 3 January 2024

திருக்குறள் கதைகள் - 584 | 584. கைதுக்குக் காரணம்?

 திருக்குறள் கதைகள் - 584


584. கைதுக்குக் காரணம்?


"என்னங்க, இவ்வளவு லேட்டா வரீங்க? ஃபோன் பண்ணினாலும் எடுக்கல!" என்றாள் சுமதி, சுந்தரராமன் விட்டுக்குள் நுழைந்ததுமே!


"என்ன செய்யறது சுமதி? நான் பாக்கறது சேல்ஸ் எக்சிக்யூடிவ் வேலை  பிராஸ்பெக்ட் யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருக்கச்சே என் ஃஃபோன் அடிச்சா, 'ஃபோன் அடிக்குது பாருங்க, எடுத்துப் பேசுங்க!'ன்னு சொல்லிட்டு இதுதான் சாக்குன்னு அவர் நழுவிடுவாரு. அதனாலதான் என் ஃபோனை சைலன்ட்லேயே போட்டு வச்சிருக்கேன். வீட்டுக்குக் கிளம்பறப்பதான் ஃபோனை எடுத்துப் பாத்தேன். நாலஞ்சு தடவை ஃபோன் பண்ணி இருக்க! என்ன விஷயம்?" என்றான் சுந்தரராமன் டையைக் கழற்றியபடியே. 


"ராணி புருஷனை போலீஸ்ல கைது செஞ்சுட்டாங்களாம். அவ ஃபோன் பண்ணி அழறா. எனக்கு வேற யரும் இல்ல, உன் புருஷன்கிட்ட சொல்லி ஏதாவது செய்யச் சொல்லுன்னு அழுதா. அதுக்குத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன்., நீங்க என்னன்னா ஃபோனை எடுக்காம ராத்திரி ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வரீங்க!" என்றாள் சுமதி வருத்தத்துடனும், கோபத்துடனும்.


"என்னது உன் அக்கா புருஷனைக் கைது செஞ்சுட்டாங்களா? தங்கமான மனுஷனாச்சே அவரு!  என்ன செஞ்சாராம் அவரு?" 


"அவரு என்ன செய்யப் போறாரு? அவருதான் தங்கமான மனுஷன்னு நீங்களே சொல்றீங்களே!  ஏதோ கலவரம் விஷயமான்னு சொன்னாங்களாம். அதுக்கு மேல விவரம் சொல்ல மாட்டேன்னுட்டாங்களாம். அவரு பாட்டுக்கு எப்பவும் பேப்பர் படிச்சுக்கிட்டு வீட்டில உக்காந்திருக்கறவரு. அவருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"


"சில சமயம் குழப்பத்தில தப்பா யாரையாவது கைது பண்ணிடுவாங்க. காலையில  ஒரு வக்கீலை அழைச்சுக்கிட்டுப் போயி அவரை ஜாமீன்ல எடுக்க முடியுமான்னு பாக்கறேன" என்றான் சுந்தரராமன்.


மறுநாள் காலை 10 மணிக்கு சமதியைத் தொலைபேசியில் அழைத்த சுந்தரராமன்," உன் அக்கா புருஷனை ஜாமீன்ல எடுக்க முடியாத சட்டத்தில கைது செஞ்சிருக்காங்க சுமதி! அவரு சில கலவரக்காரங்களோட தொடர்பு வச்சுக்கிட்டிருக்காராம். பதினைஞ்ச நாள் காவல்ல வச்சிருக்காங்க. அதுக்கப்பறம் அவர் காவலை நீட்டிக்க அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவாங்க. அப்ப ஜாமீனுக்கு முயற்சி செய்யலாம்னு வக்கீல் சொல்றாரு. சாரி! இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது" என்று தெரிவித்தான் சுந்தரராமன்.


"கங்கிராட்ஸ், சுந்தரராமன்! உங்க சகலைன்னும் பாக்காம  நீங்க கொடுத்த தகவல்னால கோவிந்தராஜனைக் கைது செய்ய முடிஞ்சுது" என்றார் சுந்தரராமனின் மேலதிகாரி குமாரசாமி.


"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்! ஏற்கெனவே  இன்டலிஜன்ஸ் துறையில வேலை செய்யறேன்னு சொல்ல முடியம ஒரு போலியான நிறுவனத்தில சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கேன்னு என் மனைவி உட்பட எல்லார்கிட்டேயும் பொய் சொல்லிக்கிட்டிருக்கேன். என் சகலையையே வேவு பார்த்து அவருக்குக் கலவரக்காரங்களோட தொடர்பு இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்லி அவரைக் கைது செய்ய வச்சு, ஒண்ணுமே தெரியாத மாதிரி அவருக்கு ஜாமீன் எடுக்க முயற்சி பண்ற மாதிரி என் மனைவியை ஏமாத்த வேண்டி இருக்கு. இப்படித்தான் ரெண்டு வருஷம் முன்னால போதைப்பொருள் கடத்தல்ல ஈடுபட்டிருந்த என் நண்பன் ஒத்தனைப் பத்தி துப்புக் கொடுத்து அவனைக் கைது செய்ய வச்சேன். சில சமயம் நினைச்சுப் பாத்தா ரொம்ப வருத்தமா இருக்கு சார்!" என்றான் சுந்தரராமன்.


"என்ன செய்யறது சுந்தரராமன்! நாம பாக்கற வேலை அப்படி. நம்ம டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்ச ரமணியே கள்ளக் கடத்தல்காரங்களுக்கு உடந்தையா இருந்ததை நான் வேவு பார்த்து அவரைப் பிடிச்சுக் கொடுக்கலியா? கீதையில கிருஷ்ணன் சொன்னாரே, போர்க்களத்துக்கு வந்தப்பறம் சொந்தக் காரங்க. எதிரி, நண்பன்னெல்லாம் பாக்கக் கூடாதுன்னு, அது நாம பாக்கற வேவுத் தொழிலுக்கு நல்லாவே பொருந்தும்!" என்றார் குமாரசாமி."


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 59

ஒற்றாடல்


குறள் 584:

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று.


பொருள்: 


தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.