Friday, 31 May 2024

திருக்குறள் கதைகள் - 732 பொருட்பால்

 திருக்குறள் கதைகள் - 732


732. தேச விரோதி!



தேசவிரோதக் குற்றம் சாட்டப்பட்ட பரதன் கைது செய்யப்பட்டு அரசவைக்கு அழைத்து வரப்பட்டான்.


கைது செய்யப்பட்டவன் செய்த குற்றங்களைக் காவலர் தலைவர் படித்துக் காட்டினார்.


"இந்த அவையின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பரதன் என்ற இந்த இளைஞன் தன் ஊரில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வந்தான். அந்த கிராம மக்களும் இவன் பேச்சைக் கேட்டு நம் நாட்டு விதிகளுக்குப் புறம்பான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர். அதனால் அவன் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்."


"பரதா! நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் அரசர்.


"அரசே! என்னை தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் காவலர் தலைவர் கூறி இருக்கிறார். நான் தேசத்துரோகி என்றால் தாங்களும் தேசத்துரோகிதான்!" என்றான் பரதன்.


அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பரதனைப் பிடித்துக் கொண்டிருந்த காவலர் அவனை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு மன்னர் என்ன கூறப் போகிறார் என்று மன்னரைப் பார்த்தார்.


மன்னர் சிரித்தபடி, "சொல்லு பரதா! நான் செய்த தேசத்துரோகக் குற்றம் என்ன?" என்றார்.


"அரசே! தாங்கள் முடிசூட்டிக் கொண்ட பிறகு அரண்மனையின் உப்பரிகையில் நின்று ஆற்றிய உரையைக் கேட்ட மக்களில் நானும் ஒருவன். அப்போது தாங்கள் கூறியவை தங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்!" 


'என்ன இவன் மன்னர் என்ற மரியாதை இல்லாமல் தனக்குச் சமமான ஒருவருடன் பேசுவது போல் பேசுகிறானே!' என்று அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, மன்னர் சிரித்துக் கொண்டே, "நினைவிருக்கிறது பரதரே! ஆயினும் அதைத் தங்கள் வாயால் கேட்க விரும்புகிறேன்!" என்றார்.


மன்னர் அவனை 'பரதரே!' என்று மரியாதையாக விளித்துப் பேசியது மன்னர் பரதன் மீது கடும் கோபத்தில் இருப்பதையும் அவர் அவனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் போவதையும் காட்டுவதாகப் பலரும் நினைத்தனர்.


"அரசே! நம் நாடு செல்வச் செழிப்புடன் விளங்க வேண்டும். மற்ற நாட்டில் வசிப்பவர்கள் கூட நம் நாட்டின் வளத்தைப் பறிக் கேள்வியுற்று இங்கே வந்து வசிக்க விரும்ப வேண்டும், குற்றங்கள், நோய்கள் போன்ற தீமைகள் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும், இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக நம் நாட்டில் உள்ள நிலவளத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி நம் தேவைக்கு அதிகமாக விளைபொருட்களை விளைவித்து மிகுதியைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருள் ஈட்ட வேண்டும், இவற்றை நிறைவேற்றுவதுதான் என் லட்சியம் என்று தாங்கள் கூறினீர்கள்!" என்றான் பரதன்.


"ஆமாம், கூறினேன். இதைத்தான் தேசவிரோதச் செயல் என்று கூறுகிறாயா?"


":தாங்கள் கூறிய இதே விஷயங்களை என் கிராமத்தில் நிறைவேற்ற நான் செய்த முயற்சிகளைத்தானே தேசத்துரோகம் என்று கூறிக் காவலர்கள் என்னைக் கைது செய்திருக்கிறார்கள்!"


அரசர் காவலர் தலைவரைப் பார்த்தார்.


"அரசே! இவன் ஊர் மக்களை விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் செய்யும்படி தூண்டி இருக்கிறான். ஊருக்குப் பொதுவாக இருக்கும் நிலங்களை அரசு அதிகாரியின் அனுமதியின்றி ஆக்கிரமிக்கும்படி ஊர் மக்களைத் தூண்டி இருக்கிறான். அனுமதியின்றிக் கால்வாய்களை அமைத்து ஆற்று நீரைத் திசை மாற்றி இருக்கிறான். ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர் மக்களே விசாரிக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறான். இது போன்ற தகாத செயல்களைத் தன் ஊரில் செய்த்து மட்டுமின்றி பக்கத்து ஊர்களில் உள்ள மக்களையும் இதுபோல் செய்யத் தூண்டி இருக்கிறான்!" என்றார் காவலர் தலைவர்.


"என் சக தேசத்துரோகி பரதர் என்ன செய்திருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் அதை அவர் வாயாலேயே சொல்லக் கேட்க விரும்புகிறேன்!" என்றார் அரசர் புன்முறுவல் மாறாமல்.


பரதன் சற்று வியப்புடன் அரசரைப் பார்த்து விட்டுப் பிறகு துணிவு பெற்றவனாகப் பேசத் தொடங்கினான், 


"அரசே! எங்கள் ஊரில் விளைநிலங்கள் சில தரிசாகக் கிடக்கின்றன. அவை பொதுநிலம் என்பதால் அவை பண்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்டு அரசு அதிகாரிகளை அணுகினேன். ஆனால் அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அவற்றை ஊர் மக்கள் தாங்களே பண்படுத்திப் பயிர் செய்து அரசாங்கத்துக்கு உரிய வரியைச் செலுத்தி விட்டு மிகுதியுள்ள விளைச்சல் வருமானத்தை ஊருக்குப் பொதுவாக வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் மக்களிடம் கூறினேன். 


"இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கான கூலியைத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கச் சில செல்வந்தர்கள் முன் வந்தனர். அவர்கள் செலவழித்த பணத்துக்கு ஈடாக விளைச்சலிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்பாடு. இதனால் ஊரும் வளம் பெறும், அரசாங்த்துக்கும் வரி வருமானம் கிடைக்கும். 


"ஊரில் உள்ள ஆற்றுநீரைச் சரியாகப் பயன்படுத்த முடியாததால் அவற்றில் வரும் நீர் வீணாகிறது. ஒருசில பெருநிலக்காரர்கள் தங்கள் நிலத்துக்கு மட்டும் நீர் வரும்படி கால்வாய்களை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஊரில் பலருக்கும் பயன்படும்படி மாற்றி அமைத்தோம். 


"ஊரில் உள்ள அனைவரும் விவசாயத்திலேயே ஈடுபடுவதை மாற்றித் திறமையும், முனைப்பும் உள்ள சிலரை வேறு தொழில்கள், வியாபாரங்களில் ஈடுபடும்படி ஊக்குவித்தேன். 


"ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர்ப் பெரியவர்களே விசாரித்து, குற்றம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்பாமல் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கான ஒரு அமைப்பை ஊரில் உருவாக்கினோம். 


"எங்கள் ஊரில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிப்பதைப் பார்த்து பக்கத்து ஊர்க்காரர்கள் சிலர் தாங்களும் இதேபோல் செயல்பட உதவும்படி எங்களை அணுகினர். அவர்களை எங்கள் ஊருக்கு வரவழைத்து நாங்கள் செயதவற்றை அவர்களுக்குக் காட்டினோம். அந்தத் திட்டங்களை அவர்கள் தங்கள் கிராமங்களிலும் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள்!"


"இப்படியே போய்க் கொண்டிருந்தால் இதுபோல் எல்லா ஊர்க்காரர்களும் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்புறம் நாடே வளம் பெற்றதாக ஆகி விடாதா? எவ்வளவு பெரிய தேசத்துரோகச் செயல் இது!" என்றார் அரசர்.


அனைவரும் குழப்பத்துடன் அரசரைப் பார்க்க, அரசர் அமைச்சரைப் பார்த்து, "அமைச்சரே! உங்களுக்கு உதவியாளராக அறிவும், திறமையும் கொண்ட ஒரு நபர் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தீர்களே, இந்த பரதனை விடச் சிறந்த மனிதர் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்!" என்றார்.


மன்னரின் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு பரதனைப் பிணைத்திருந்த சங்கிலிகளைக் காவலர்கள் விடுவித்தனர்.


பொருட்பால்

அரணியல்

அதிகாரம் 74

நாடு


குறள் 732:


பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.


பொருள்: 


மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.




Friday, 12 April 2024

திருக்குறள் கதைகள் - 686 பொருட்பால்

 திருக்குறள் கதைகள் - 686



686. தேவை ஒரு தூதர்


"நாம் தூதரை அனுப்பப் போவது களஞ்சிய நாட்டுக்கு. களஞ்சிய நாட்டு மன்னன் சேர்வராயன் அறிவாளி. நூல்கள் பல கற்றவன். அதனால் நம் தூதரிடம் நியாயமாகப் பேசுவது போல் வாதிடுவான். பல சரித்திர நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி தர்க்கம் செய்வான். 


"அதனால் அவனிடம் உண்மைகளை எடுத்துக் கூறவும், அவன் வாதங்களுக்கு பதில் கூறவும் நாம் அனுப்பும் தூதர் நல்ல கல்வி அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். அவனிடம் நம் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும். 


"சேர்வராயனிடம் இன்னொரு குணம் உண்டு. தன் வாதங்கள் எடுபடாமல் போனாலோ, மற்றவர் தன் கருத்தில் உறுதியாக இருந்தாலோ அவர்களை அச்சுறுத்த நினைப்பான். தூதர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது என்ற மரபு இருந்தாலும் தன் கோபமான பார்வையாலும், அச்சுறுத்தும் பேச்சுக்களாலும் துதராக வந்தவரை மிரட்டப் பார்ப்பான். இவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய ஒருர்தான் தூதராகச் செல்ல வேண்டும்."


அரசன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பதில் கூறவில்லை.


"என்ன அமைச்சரே! நான் குறிப்பிட்ட தகுதிகள் உள்ள யாரும் உங்கள் கவனத்துக்கு வரவில்லையா?"


"ஒருவர் இருக்கிறார் அரசே! ஆனால் அவரைத் தூதராக அனுப்ப முடியுமா என்று தெரியவில்லை!" என்றார் அமைச்சர் தயக்ககத்துடன்.


"யார் அவர்? அவரை ஏன் அனுப்ப முடியாது?"


"தாங்கள் விருப்பப்பட்டால் அனுப்பலாம். ஆனால் அவர் இப்போது சிறையில் இருக்கிறார்!" என்றார் அமைச்சர்.


"சிறையில் இருக்கிறாரா? யார் அவர்?"


"உங்கள் ஒன்று விட்ட சகோதரர் நந்திவர்மர்!" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.


"நந்திவர்மனா? ராஜதுரோகக் குற்றத்துக்காகச் சிறையில் இருக்கும் அவன்தான் உங்களுக்குக் கிடைத்தானா?" என்றான் அரசன் கோபத்துடன்.


"அரசே! தாங்கள் அவருக்கு நிர்வாகத்தில் ஒரு பொறுப்புக் கொடுத்தீர்கள். ஆனால் அவர் செய்த சில விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் அவரைக் கூப்பிட்டு விசாரித்தபோது அவர் தன் பக்கத்து நியாயங்களை உங்களிடம் எடுத்துக் கூறினார். அவர் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 


"தனக்குச் சரியென்று தோன்றும் விதத்திலும் நாட்டு நலனுக்கு எது உகந்தது என்று சிந்தித்தும்தான் செயல்படுவதாக அவர் கூறினார். நீங்கள் கோபமடைந்து அவரைப் பதவிநீக்கம் செய்ததுடன் சிறையிலும் அடைத்து விட்டீர்கள். அவர் தங்களுக்கு எதிராகவோ, நாட்டு நலனுக்கு எதிராகவோ எதையும் செய்யவில்லை. தங்கள் கோபத்துக்கு அஞ்சாமல் தன் கருத்துக்களில் உறுதியாக இருந்ததுதான் அவர் செய்த குற்றம். 


"யோசித்துப் பார்த்தால் தூதராகச் செல்பவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் அவரிடம் இருப்பதை உணர்வீர்கள். தாங்கள் அவரைச் சிறையிலிருந்து விடுவித்து தூதராக அனுப்புவதுடன் அரசுப் பணிகளில் அவரைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வது தங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்பது என் பணிவான கருத்து!"


அமைச்சர் தன் கருத்தைக் கூறி விட்டு அரசன் என்ன சொல்லப் போகிறானோ என்ற தயக்கத்துடன் நின்றார்.


ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அரசன், "அமைச்சரே! உங்கள் பேச்சைக் கேட்டதும், தூதருக்கு இருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்ட குணங்கள் நந்திவர்மனிடம் மட்டுமல்ல, உங்களிடமும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். நந்திவர்மனை விடுதலை செய்து மரியாதையுடன் அழைத்து வரச் சொல்லுங்கள். நானே அவனிடம் பேசுகிறேன்!" என்றான் அரசன்.


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 69

தூது


குறள் 686:


கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.


பொருள்:


கற்க வேண்டியவற்றைக் கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்துக்குப் பொருத்தமானதை அறிந்து செயல்படுபவனே தூதன்.


Friday, 15 March 2024

திருக்குறள் கதைகள் - 635 635. அந்தரங்க உதவியாளர்

 திருக்குறள் கதைகள் - 635


635. அந்தரங்க உதவியாளர்



"அண்ணன் மத்திய அமைச்சர் ஆயிட்டாரு. இது அவருக்குப் புதுப் பொறுப்பு. எப்படிச் சமாளிக்கப் போறாரோ தெரியல!"


"ஆமாம். மாநில அமைச்சரா இருக்கறது  அங்கே என்ன வேலை செய்யறதுன்னு புரிஞ்சுக்கறதே கஷ்டம். அங்கே உள்ள அதிகாரிகள் வேற மாதிரி இருப்பாங்க. அவங்களை சமாளிக்கணும். அண்ணனுக்கு ஆங்கிலம் தெரியும்னாலும் டில்லியில அமைச்சரா இருக்கறது அவருக்குப் பெரிய சவாலா இருக்கும்." 


"அதனாலதான் ஒரு நல்ல உதவியாளரை வச்சுக்கப் போறாராம்?"


"'யாரை வச்சுக்கப் போறாரு?"


"தன் அந்தரங்க உதவியாளர் மூலமாதான் மத்திய அரசு அதிகாரிகள், மற்ற அமைச்சர்களோட  இணைந்து அவரால இணைஞ்சு பணியாற்ற முடியும்.  நம்ம கட்சியில இருக்கற ஒரு படிச்ச அறிவுள்ள ஆளை வச்சுப்பாருன்னு நினைக்கிறேன்!"


"அப்ப உனக்கோ, எனக்கோ வாய்ப்பில்லேன்னு சொல்லு!" 


கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.


"என்ன ஆறுமுகம், மத்திய அமைச்சரா ஆயிட்டீங்க. உங்களுக்கு உதவியாளரா வரதுக்குக் கட்சிக்குள்ள நிறையப் போட்டி இருக்கு போலருக்கே!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.


"ஆமாங்க. அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேச வந்தேன். நான் ஒத்தரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். அதுக்கு நீங்க ஒப்ப்தல்  கொடுக்கணும்!" என்றார் ஆறுமுகம்.


"சொல்லுங்க!" என்றார் சபாபதி.


ஆறுமுகம் சொன்ன பெயரைக் கேட்டதும் "குணசீலனா? சின்னப் பையனாச்சே அவன்! மேடையில நல்லா பேசறாங்கறதால அவனை செய்தித் தொடர்பாளராப் போட்டேன். அவனும் தொலைக்காட்சி விவாதங்கள்ள நல்லாவே பேசறான். ஆனா அந்தரங்கச் செயலர் பதவிக்கு அவன் சரியா இருப்பானா? மூத்த தலைவர்கள் எல்லாம் இந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்காதான்னு காத்துக்கிட்டிருக்காங்க. எங்கிட்ட சில பேரு சிபாரிசுக்குக் கூட வந்தாங்க. ஆனா நான் ஆறுமுகம்தான் முடிவு செய்வாரு, நான் யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனா இப்படி அனுபவம் இல்லாத ஒரு சின்னப் பையனைப் போடறீங்கறீங்களே!"


"ஐயா! முதல் தடவையா நம்ம கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு. என் மேல நம்பிக்கை வச்சு அதை நீங்க எனக்குக் கொடுத்திருக்கீங்க. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறப்பா செயல்பட்டு நம்ம கட்சிக்கு இந்திய அளவில ஒரு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.


"குணசீலன் படிச்சவர்.நேர்மையானவர். தொலைக்காட்சி விவாதங்கள்ள அவர் நியாமாப் பேசறதை எல்லாரும் பாராட்டறாங்க. நம் கட்சியை ஆதரிச்சுப் பேசறப்ப, அவர் உண்மைகளையும், நியாயங்களையும் மட்டும்தான் எடுத்து வைப்பாரு. மற்றவர்களை வசை பாட மாட்டாரு. சிந்திச்சு, அளவா, பொருத்தமாப் பேசுவாரு. 


"அதோட இல்லாம கட்சியில அவருக்கு அவ்வப்போது நீங்க கொடுத்த சின்னப் பொறுப்புகளை ரொம்பத் திறமையா நிறைவேற்றி இருக்காரு. அவரை உதவியாளரா வச்சுக்கிட்டா, அவர் ஒரு நல்ல ஆலோசகராவும் இருப்பாரு. அதனாலதான் அவரைத் தேர்ந்தெடுத்தேன்."


ஆறுமுகம் சபாபதியைப் பார்த்தார்.


"கட்சியில இது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தும். மூத்த தலைவர்கள் எல்லாம் கொஞ்சம் அதிருப்தி அடைவாங்க. ஆனா நீங்க யோசிச்சு சரியான முடிவு எடுத்திருக்கும்போது, உங்க முடிவை ஆதரிக்க வேண்டியது என் கடமை. வாழ்த்துக்கள்!" என்றார் கட்சித் தலைவர் சபாபதி.


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 64

அமைச்சு


குறள் 635:


அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.


பொருள்:


அறத்தை அறிந்து, கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைக

திருக்குறள் கதைகள் - 657 | கடன் வசூல் அதிகாரி

 திருக்குறள் கதைகள் - 657


657. கடன் வசூல் அதிகாரி



குமரனை யாராவது "எங்கே வேலை செய்யற?" என்று கேட்டால் அவன் சொல்லும் வெளிநாட்டு வங்கியின் பெயரைக் கேட்டுப் பலரும் அவனை மதிப்புடன் பார்ப்பார்கள்.


"என்ன வேலை?" என்று பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. அப்படி.யாராவது கேட்டால் 'கடன் வசூல் அதிகாரி' என்று சொல்வான். அதற்கு மேல் யாரும் விரிவாக அவன் வேலை பற்றிக் கேட்க மாட்டார்கள்.


குமரனுக்குப் பெற்றோர்கள் இல்லாததால் அவன் சித்தப்பா அவனுக்குப் பெண் பார்த்தார்.


பெண் பார்க்கச் சென்றபோது, பெண்ணிடம் தனியாகப் பேச விரும்பினான் குமரன். பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்ததும் இருவரும் ஒரு அறைக்குள் அமர்ந்து பேசினர்.


"நான் என்ன வேலை செய்யறேன்னு உனக்குத் தெரியுமா?" என்றான் குமரன்.


"கடன் வசூல் அதிகாரின்னு சொன்னாங்களே!" என்றாள் கிரிஜா என்ற அந்தப் பெண்.


"ஆமாம். ஆனால் கடன் வசூல் அதிகாரி இல்லை, கடன் வசூல் அடியாள்!"


"என்ன சொல்றீங்க?"


"எங்க வங்கில கடன் வாங்கிட்டுத் தவணை கட்டாதவங்க,, கிரடிட் கார்ட்ல பொருள் வாங்கிட்டுப் பணம் கொடுக்காதவங்க இவங்க வீட்டுக்கெல்லாம் போய் மிரட்டணும், அக்கம்பக்கத்தில இருக்கறவங்களுக்குக் கேட்கற மாதிரி அவமரியாதையாப் பேசணும், வீட்டுக்குள்ள போய் வெளியில இருக்கறவங்க , பாக்காம ரெண்டு அடி கொடுக்கணும், கொலை மிரட்டல் விடுக்கணும். கார், பைக், டிவி மாதிரி பொருட்களைத் தூக்கிக்கிட்டு வரணும். இந்த மாதிரி வேலைதான் நான் செய்யறது!" என்றான் குமரன் வெறுப்புடன்.


"எங்க பக்கத்து விட்டில கூட இந்த மாதிரி வந்து மிரட்டினாங்க. எங்களுக்கே பயமா இருந்தது!" என்றாள் கிரிஜா.


"ஆரம்பத்தில எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா இப்பல்லாம் மத்தவங்களை மிரட்டி, அவங்களுக்கு பயத்தை வரவழைச்சு எல்லாத்தையும் வித்தாவது பணத்தைக் கட்ட வைக்கறது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. நான் சம்பளத்துக்குத்தான் வேலை செய்யறேன்னாலும், பழி, பாவம் எல்லாம் எனக்குத்தானே! அவங்க என்னை எப்படி வெறுப்பாங்க, எப்படியெல்லாம் சாபம் கொடுப்பாங்க! சில பேர் 'படுபாவி, நீ நல்லா இருப்பியா?'ன்'னு நேரடியாவே எனக்கு சாபம் விடுவாங்க. மனசுக்குள்ள என்னை சபிக்கிறவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. என் மிரட்டலுக்கு பயந்து பணம் கட்டவும் வழியில்லாம ஒத்தர் தற்கொலையே பண்ணிக்கிட்டாரு!"


"இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"


"நான் இந்த வேலையில நான் தொடர விரும்பல. ஆனா நான் அதிகம் படிக்கல. அதனால எனக்கு வேற நல்ல வேலை கிடைக்காது. குறைஞ்ச சம்பளத்திலதான் வேலை கிடைக்கும். அந்த நிலையில நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிப்பியா?" 


"நிச்சயமா. அதிக வருமானத்துக்காக என்ன பழி வந்தாலும் பரவாயில்லேன்னு  ஒரு தப்பான வேலையில இருக்கறதை விட, வறுமை வந்தாலும் பரவாயில்லைன்னு நியாயமான வேலை பாக்கறதே நல்லது" என்றாள் கிரிஜா.


"அப்படின்னா, நான் வேற வேலையில சேர்ந்துட்டு அப்புறம் உன் வீட்டில வந்து பெண் கேக்கறேன்!" என்றான் குமரன் மன நிறைவுடன்.


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 66

வினைத்தூய்மை

குறள் 657:


பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை..


பொருள்:


பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.



Thursday, 15 February 2024

திருக்குறள் கதைகள் - 627

 திருக்குறள் கதைகள் - 627



627. படுத்த படுக்கையில் அம்மா!


அம்மா படுத்துக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களாகப் படுத்துக் கொண்டுதான் இருக்கிறார்- சில நாட்கள் மருத்துவமனையில், சில நாட்கள் வீட்டில் என்று.


அப்பா பெரும்பாலும் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டிருப்பார். பல சமயம் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை!


நானும் சாருவும் வீட்டில் இருக்கும்போது சில நிமிடங்களுக்கு மேல் பேச எங்களிடம் விஷயம் இருப்பதில்லை. அந்த இரண்டு மூன்று நிமிடங்களிலும், வீட்டு உபயோகப் பொருள் பழுதானது, ஏ சியின் குளிர்ச்சி போதாமல் இருப்பது, எங்கள் குழந்தைகளின் பள்ளிப் பிரச்னைகள் இவை பற்றித்தான் இருக்கும்.


இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் பேசும் அளவுக்குப் பிரச்னைகள் இல்லை என்பது எங்கள் இருவருக்குமே ஆறுதலான விஷயம்!


"எப்படிம்மா இருக்கே?" என்றேன் அம்மாவிடம்.


அம்மா பலவீனமாகத் தலையை ஆட்டினார்.


"எப்பவும் மாதிரிதான், கொஞ்ச நேரம் அமைதியா, கொஞ்ச நேரம் வலியோடன்னு மாத்தி மாத்தி!" என்றார் அப்பா.


அப்பாவிடம் கண் ஜாடை காட்டி அவரைத் தனியாக அழைத்தேன்.


அப்பா என்னைத் தொடர்ந்து என் அறைக்கு வந்தார்.


"ஏம்ப்பா, அம்மாவுக்கு உடம்பு முடியல. நீ பாட்டுக்கு அவங்க பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டே இருக்கியே!" என்றேன் நான்.


"நான் அவ பக்கத்தில உக்காந்து பேசிக்கிட்டிருக்கறது அவளுக்கு சந்தோஷமா இருக்கு. அவ வலியைக் கொஞ்சம் மறக்க உதவியா இருக்கு" என்றார் அப்பா.


"எப்படிப்பா இவ்வளவு உடம்புப் பிரச்னைகளோட அம்மா உங்கிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்காங்க?" என்றான் நான் வியப்புடன்.


"உன் அம்மா எப்பவுமே அப்படித்தான். ஏதாவது சின்ன பிரச்னை வந்தாகூட நான் சுணுங்கிப் போயிடுவேன். உங்கம்மாதான் எனக்கு தைரியம் சொல்லுவா. வீட்டில யாருக்காவது உடம்பு சரியில்லேன்னா நான் உடனே கவலைப்பட ஆரம்பிச்சுடுவேன். ஆனா, உங்கம்மா 'உடம்புன்னு ஒண்ணு இருந்தா வியாதின்னு ஒண்ணு வரத்தான் செய்யும். டி வி, மிக்ஸி இதெல்லாம் ரிப்பேர் ஆகறதில்லையா? சில சமயம் சின்ன ரிப்பேரா இருக்கும், சில சமயம் பெரிய ரிப்பேரா இருக்கும், சில சமயம் ரிப்பேரே பண்ண முடியாது'ன்னு சொல்லிட்டுச் சிரிப்பா. 


"எனக்கு வேலையில பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள் வந்தாலும் அப்படித்தான் சொல்லுவா. 'தினமும் ஸ்கூட்டர்ல ஆஃபீஸ் போறீங்களே, நிக்காம நேரேயா போறீங்க? அங்கங்கே சிக்னல்ல நின்னுதானே போறீங்க! சில சமயம் டயர் பஞ்சர் ஆகுது, இல்ல ஸ்கூட்டர் நின்னு போயிடுச்சுன்னு அதை எங்கேயாவது விட்டுட்டு பஸ்ல போறீங்க. இயல்பா நடக்கற விஷயங்களை நாம ஏத்துக்கணுங்க. இயல்பா விஷயங்கள் நடக்கலேன்னாதான் கவலைப்படணும்.' இது மாதிரி ஏதாவது சொல்லுவா.


"ஆரம்பத்தில எல்லாம் அவ சொல்றது எனக்கு எரிச்சலா இருக்கும். 'நீ வீட்டில உக்காந்துக் கிட்டு ரொம்ப சுலபமாப் பேசற, அனுபவிக்கிறவனுக்குத்தானே கஷ்டம் தெரியும்?'னு எரிச்சலோட பதில் சொல்லுவேன். 


"ஆனா போகப் போக அவ சொன்னதோட உண்மை புரிஞ்சு என்னை நானே மாத்திக்கிட்டேன். அப்புறம் பிரச்னைகளை சந்திக்கறது சுலபமா இருந்தது. உங்கம்மாவுக்கு இவ்வளவு உடல்நலப் பிரச்னைகள் இருக்கறப்பவும் அவளால சிரிச்சுக்கிட்டு இயல்பா இருக்க முடியுதுன்னா அது கஷ்டங்கள் வரது இயல்பான விஷயங்கறதை அவ உணர்ந்து ஏத்துக்கற அவளோட இந்த மனப்பான்மையாலதான்!"


அம்மா என்னிடம் கூட இது போல் பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்தியதில்லை. இப்போது அப்பா சொன்ன பிறகுதான் அம்மா எனக்குப் புகட்ட விரும்பிய  விஷயங்களின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது.


"நான் அம்மாகிட்ட நிறையக் கத்துக்கணும்ப்பா. நானும் இனிமே கொஞ்ச நேரமாவது அம்மா பக்கத்தில உக்காந்து கிட்டு அவங்ககிட்ட பேசி, அவங்க பேசறதையும் கேக்கறேன்!" என்றேன் நான்.


"சீக்கிரமா செய்ய ஆரம்பி. அதிக காலம் இல்லேன்னு நினைக்கிறேன்!" என்றார் அப்பா. 

அரசியல் இயல்

அதிகாரம் 63

இடுக்கண் அழியாமை  (துன்பத்தால் அழிந்து போகாமல் இருத்தல்)

குறள் 627:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்.

பொருள்:

துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.


Friday, 26 January 2024

திருக்குறள் கதைகள் - 608 ஏன் இந்த நிலை?

 திருக்குறள் கதைகள் - 608



608. ஏன் இந்த நிலை?


"ஏண்டா, செல்வம் என்டர்பிரைசஸ் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் பண்ணச் சொன்னேனே,வசூல் பண்ணினியா இல்லையா?" என்றான் கோபாலசாமி.


"இல்லீங்க! தினம் போய் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு நாளைக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருக்காரு!" என்றான் வேல்முருகன்.


"நீ ஒரு சோம்பேறியாச்சே! அவங்க சொன்ன நேரத்துக்குப் போயிருக்க மாட்டே! சம்பளம் கொடுக்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள நீ அந்தப் பணத்தை வசூலிக்கலேன்னா உனக்கு இந்த மாசம் சம்பளம் கிடையாது!"


முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு முதலாளியின் அறையிலிருந்து வெளியே வந்த வேல்முருகனைப் பச்சாதாபத்துடன் பார்த்தார் அக்கவுன்டன்ட் குணசீலன்.


சற்று நேரத்தில் வேல்முருகன் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க வெளியே கிளம்பி விட்டான்.


வேல்முருகன் வெளியே சென்றதும், "பாவம்! பெரிய இடத்துப் பிள்ளை! இவன்கிட்ட அடிமைப் பொழைப்பு பொழைக்கணும்னு அவனுக்குத் தலையெழுத்து!" என்றார் குணசீலன் தன் அருகிலிருந்த ஊழியன் சபாபதியிடம்.


"பெரிய இடத்துப் பிள்ளையா?" என்றான் சபாபதி வியப்புடன்.


"ஆமாம். வேல்முருகனோட அப்பா அவங்க ஊர்ல ஒரு பெரிய மனுஷர். ஊர்ல அவருக்கு ரொம்ப மரியாதை உண்டு. வேல்முருகன் அவருக்கு ஒரே பையன். அவர் போனப்பறம் வேல்முருகன் வேலைக்குப் போகாம வெட்டியா வீட்டில உக்காந்து பொழுதைக் கழிச்சுக்கிட்டிருந்தான். அவன் அம்மாவும் இறந்தப்பறம் அவனுக்கு புத்தி சொல்ல யாரும் இல்ல. அப்பா விட்டுட்டுப் போன சொத்து கரைஞ்சுக்கிட்டே இருந்தது அவனுக்குத் தெரியல. "கல்யாணம் ஆகிக் குடும்பமும் ஏற்பட்டப்பறம்தான் குடும்பம் நடத்தவே பணம் இல்லேங்கற நிலைமை வந்தது அவனுக்குப் புரிஞ்சுது"


"நிறைய சொத்து இருந்த்துன்னு சொன்னீங்களே!"


"எவ்வளவு சொத்து இருந்தா என்ன? சம்பாதிக்காம சொத்தை வித்துத் தின்னுக்கிட்டிருந்தா  சொத்து எவ்வளவு வேகமாக் கரையுங்கறது அந்த நிலைமையை அனுபவிச்சங்களுக்குத்தான் தெரியும். நீங்க அனுபவிச்சிருக்கீங்களான்னு கேக்காதே! இந்த அனுபவம் பல பேருக்கு ஏற்பட்டதை நான் பாத்திருக்கேன்!" என்றார் குணசீலன்.


"அப்புறம்?" என்றான் சபாபதி கதை கேட்கும் ஆர்வத்துடன்.


"அப்புறம் என்ன? வேல்முருகன் வேலை தேட ஆரம்பிச்சான். எதுவும் கிடைக்கல. கடைசியில நம்ம ஆள்கிட்ட வந்து மாட்டினான். இதில சோகம் என்னன்னா நம் முதலாளியோட அப்பாவுக்கும் வேல்முருகனோட அப்பாவுக்கும் ஆகாது. இப்ப அவர் பையன் வேல்முருகன் மேல இரக்கப்பட்டு அவனுக்கு வேலை கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு அவனை ஒரு அடிமை மாதிரி. நடத்தறான். தன்னை விட வயசில பெரியவன்னு கூட பாக்காம வேல்முருகனை வாடா போடான்னு பேசறதும், விரட்டறதும், கடுமையாப் பேசறதும், எனக்கு பாக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றார் குணசீலன்.


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 61

மடியின்மை (சோம்பலின்மை)


குறள் 608:

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.


பொருள்:

நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் வந்து பொருந்தினால், அது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.


Wednesday, 3 January 2024

திருக்குறள் கதைகள் - 584 | 584. கைதுக்குக் காரணம்?

 திருக்குறள் கதைகள் - 584


584. கைதுக்குக் காரணம்?


"என்னங்க, இவ்வளவு லேட்டா வரீங்க? ஃபோன் பண்ணினாலும் எடுக்கல!" என்றாள் சுமதி, சுந்தரராமன் விட்டுக்குள் நுழைந்ததுமே!


"என்ன செய்யறது சுமதி? நான் பாக்கறது சேல்ஸ் எக்சிக்யூடிவ் வேலை  பிராஸ்பெக்ட் யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருக்கச்சே என் ஃஃபோன் அடிச்சா, 'ஃபோன் அடிக்குது பாருங்க, எடுத்துப் பேசுங்க!'ன்னு சொல்லிட்டு இதுதான் சாக்குன்னு அவர் நழுவிடுவாரு. அதனாலதான் என் ஃபோனை சைலன்ட்லேயே போட்டு வச்சிருக்கேன். வீட்டுக்குக் கிளம்பறப்பதான் ஃபோனை எடுத்துப் பாத்தேன். நாலஞ்சு தடவை ஃபோன் பண்ணி இருக்க! என்ன விஷயம்?" என்றான் சுந்தரராமன் டையைக் கழற்றியபடியே. 


"ராணி புருஷனை போலீஸ்ல கைது செஞ்சுட்டாங்களாம். அவ ஃபோன் பண்ணி அழறா. எனக்கு வேற யரும் இல்ல, உன் புருஷன்கிட்ட சொல்லி ஏதாவது செய்யச் சொல்லுன்னு அழுதா. அதுக்குத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன்., நீங்க என்னன்னா ஃபோனை எடுக்காம ராத்திரி ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வரீங்க!" என்றாள் சுமதி வருத்தத்துடனும், கோபத்துடனும்.


"என்னது உன் அக்கா புருஷனைக் கைது செஞ்சுட்டாங்களா? தங்கமான மனுஷனாச்சே அவரு!  என்ன செஞ்சாராம் அவரு?" 


"அவரு என்ன செய்யப் போறாரு? அவருதான் தங்கமான மனுஷன்னு நீங்களே சொல்றீங்களே!  ஏதோ கலவரம் விஷயமான்னு சொன்னாங்களாம். அதுக்கு மேல விவரம் சொல்ல மாட்டேன்னுட்டாங்களாம். அவரு பாட்டுக்கு எப்பவும் பேப்பர் படிச்சுக்கிட்டு வீட்டில உக்காந்திருக்கறவரு. அவருக்கும் கலவரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"


"சில சமயம் குழப்பத்தில தப்பா யாரையாவது கைது பண்ணிடுவாங்க. காலையில  ஒரு வக்கீலை அழைச்சுக்கிட்டுப் போயி அவரை ஜாமீன்ல எடுக்க முடியுமான்னு பாக்கறேன" என்றான் சுந்தரராமன்.


மறுநாள் காலை 10 மணிக்கு சமதியைத் தொலைபேசியில் அழைத்த சுந்தரராமன்," உன் அக்கா புருஷனை ஜாமீன்ல எடுக்க முடியாத சட்டத்தில கைது செஞ்சிருக்காங்க சுமதி! அவரு சில கலவரக்காரங்களோட தொடர்பு வச்சுக்கிட்டிருக்காராம். பதினைஞ்ச நாள் காவல்ல வச்சிருக்காங்க. அதுக்கப்பறம் அவர் காவலை நீட்டிக்க அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவாங்க. அப்ப ஜாமீனுக்கு முயற்சி செய்யலாம்னு வக்கீல் சொல்றாரு. சாரி! இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது" என்று தெரிவித்தான் சுந்தரராமன்.


"கங்கிராட்ஸ், சுந்தரராமன்! உங்க சகலைன்னும் பாக்காம  நீங்க கொடுத்த தகவல்னால கோவிந்தராஜனைக் கைது செய்ய முடிஞ்சுது" என்றார் சுந்தரராமனின் மேலதிகாரி குமாரசாமி.


"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்! ஏற்கெனவே  இன்டலிஜன்ஸ் துறையில வேலை செய்யறேன்னு சொல்ல முடியம ஒரு போலியான நிறுவனத்தில சேல்ஸ் எக்சிக்யூடிவா இருக்கேன்னு என் மனைவி உட்பட எல்லார்கிட்டேயும் பொய் சொல்லிக்கிட்டிருக்கேன். என் சகலையையே வேவு பார்த்து அவருக்குக் கலவரக்காரங்களோட தொடர்பு இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்லி அவரைக் கைது செய்ய வச்சு, ஒண்ணுமே தெரியாத மாதிரி அவருக்கு ஜாமீன் எடுக்க முயற்சி பண்ற மாதிரி என் மனைவியை ஏமாத்த வேண்டி இருக்கு. இப்படித்தான் ரெண்டு வருஷம் முன்னால போதைப்பொருள் கடத்தல்ல ஈடுபட்டிருந்த என் நண்பன் ஒத்தனைப் பத்தி துப்புக் கொடுத்து அவனைக் கைது செய்ய வச்சேன். சில சமயம் நினைச்சுப் பாத்தா ரொம்ப வருத்தமா இருக்கு சார்!" என்றான் சுந்தரராமன்.


"என்ன செய்யறது சுந்தரராமன்! நாம பாக்கற வேலை அப்படி. நம்ம டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்ச ரமணியே கள்ளக் கடத்தல்காரங்களுக்கு உடந்தையா இருந்ததை நான் வேவு பார்த்து அவரைப் பிடிச்சுக் கொடுக்கலியா? கீதையில கிருஷ்ணன் சொன்னாரே, போர்க்களத்துக்கு வந்தப்பறம் சொந்தக் காரங்க. எதிரி, நண்பன்னெல்லாம் பாக்கக் கூடாதுன்னு, அது நாம பாக்கற வேவுத் தொழிலுக்கு நல்லாவே பொருந்தும்!" என்றார் குமாரசாமி."


பொருட்பால்

அரசியல் இயல்

அதிகாரம் 59

ஒற்றாடல்


குறள் 584:

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று.


பொருள்: 


தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.